Home » » இன்றைய மாணவ நண்பனுக்கு சில வார்த்தைகள் ...

இன்றைய மாணவ நண்பனுக்கு சில வார்த்தைகள் ...

*
அறுபதுகளில் மாணவர்களாக இருந்த என்னைப் போன்றவர்கள் யாருமே 1965-ல் நடந்த 'இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்ட'த்தை மறக்க முடியாது. மாணவர்களால் சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை உண்டுபண்ண முடியும் என்பதைத் தெளிவாகக் காட்டிய நிகழ்வு அது. அந்தப் போராட்டம் முடிந்தாலும், அந்தப் போராட்ட உணர்வு பல ஆண்டுகளுக்கு மாணவர் மத்தியில் இருந்தே வந்தது. ஏறத்தாழ எண்பதுகள் வரையிலும் கூட இந்தப் போராட்ட உணர்வு மாணவர்கள் மத்தியில் இருந்து வந்துள்ளது. இந்தக் கால கட்டத்தில் படித்த மாணவர்கள் மன எழுச்சி அதிகம் கொண்டவர்களாக இருந்ததாக ஓர் ஆசிரியனாக நான் உணர்ந்திருக்கிறேன். மாணவர்களிடம் போராட்டக் குணமும், அதிகம் உணர்ச்சிவயப்படும் தன்மையும் மிகுந்தே இருந்து வந்தது. அந்த உணர்வுகள் அளவுக்கு அதிகமாக இருந்ததென்னவொ உண்மைதான். ஆனால், என்ன காரணம் என்றே தெரியவில்லை .. எண்பதுகளுக்குப் பிறகு மாணவ சமுதாயம் emotional beings - என்பதிலிருந்து intellectual beings - ஆக மாறிவிட்டிருக்கிறீர்கள்!

ஒரு வேளை எண்பதுகளுக்கு முன்பு மாணவர்களாக இருந்தவர்கள் அதீத உணர்வோடு இருந்தது சரியான ஒன்றாக இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் உணர்வுகள் முழுவதும் நீர்த்துப் போய், போராட்டக் குணம் என்றால் என்னவென்றே புரியாதவர்களாக நீங்கள் ஆகிவிட்டீர்கள் என்பது பெரிய கவலைக்குரிய விஷயமே. சே குவாராவின் T-shirt போடுவது வெறும் பேஷன் என்ற அளவில்தான் உங்களுக்கும் உங்கள் போராட்ட உணர்வுகளுக்கும் உள்ள தொடர்பு. ஆனால் நரி வலம் போனால் என்ன; இடம் போனால் என்ன. என் மேல்விழுந்து கடிக்காமல் இருந்தால் போதும் - என்ற உங்கள் புத்திசாலித்தனத்தனத்தை என்னவென்று சொல்வது என்றே தெரியவில்லை. எப்படி இளம் வயதுக்கே உரிய போராட்டக் குணத்தை முழுவதுமாக இழந்து இப்படி நிற்கின்றீர்கள் என்பதும் புரியவில்லை.

அறச்சீற்றம், தார்மீகக் கோபம், Righteous anger போன்ற சொற்கள் எல்லாமே உங்களுக்கு அந்நியமாகிப் போனதாகவே நான் உணர்கிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன் ராணிமேரி கல்லூரியை அரசு மாற்ற நினைத்த போது அக்கல்லூரியின் மாணவிகள் மட்டுமாவது கொதித்தெழுந்தார்கள். மற்றைய மாணவ சமுதாயத்திற்கு அப்பிரச்சனை ஒரு பிரச்சனையாகவே தெரியாது போனது அப்போது எனக்கு ஒரு விந்தையாகவே தோன்றியது. அண்ணா பல்கலைக் கழகத்தில் காலத்திற்கு ஒவ்வாத சட்ட திட்டங்கள் வந்தபோது அங்குள்ள மாணவர்களே கூட எந்தப் போராட்டத்திலும் இறங்காதது பெரும் விந்தையாகவும் வேதனையாகவும் தோன்றியது. (இதைப்பற்றிய என் கட்டுரை இங்கே)(http://dharumi.blogspot.com/2005/10/80-dress-code.html
) இந்த இரண்டாம் நிலைதான் நம் அமெரிக்கன் கல்லூரியிலும் ஏறக்குறைய நடந்துள்ளது.

நம் கல்லூரியில் நடந்த, நடந்துவரும் போராட்டங்களின் ஆரம்பங்கள் மாணவர்கள் உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும். (ஒருவேளை அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது என்று யாரேனும் சொல்வீர்களேயாயின் அது அதைவிடவும் மிகவும் கேவலம்.) நாம் கல்வி பயிலும் இடத்தில் நடக்கும் ஓர் அநியாயத்தைப் பற்றி தெரிந்தபின்னும் அதில் ஏதும் முடிவெடுக்க முடியாத நிலையில் மாணவர்கள் இருந்தால், நாளை உலகத்தில் உங்களைச் சுற்றி நடக்கும் அநியாயங்களையும் எப்படி நீங்கள் 'கண்டுகொள்'வீர்கள்? ஆப்ரிக்க நாட்டுக் கவிதை - பலருக்கும் தெரிந்த கவிதைதான் - நினைவுக்கு வருகிறது. அந்தப் பரிதாப நிலைதான் உங்களுக்காக நாளை காத்திருக்கப் போகிறதா?



First they came for the Jews
and I did not speak out
because I was not a Jew.


Then they came for the Communists
and I did not speak out
because I was not a Communist.


Then they came for the trade unionists
and I did not speak out
because I was not a trade unionist.

Then they came for me
and there was no one left to speak out for me.



-------Pastor Martin Niemöller

மீண்டும் நம் கல்லூரி விஷயத்திற்கே வருவோம். இதே போன்ற ஒரு நிலை நான் மாணவனாக இருந்த போதோ, இல்லை எண்பதுகளிலோகூட நடந்திருந்தால் நிச்சயமாக மாணவர்கள் கல்லூரிக்கு ஆதரவாக முனைப்போடு ஒன்றாக இணைந்திருப்பார்கள். எல்லா மாணவர்களும் ஒரே ஒரு வாரம், அதுகூட தேவையில்லாமல் போயிருந்திருக்கலாம், ஒரே நாள் முழுமையாக இணைந்திருந்தால் இன்று நம் கல்லூரியின் பெயர் இப்படி தேவையில்லாமல் சமூகத்தில் நாறிப்போயிருக்குமா? இது முடியுமா, சாத்தியமா என்று என் அன்பு மாணவனே, நீ ஒரு வேளை நினைத்தால், ஒரு மாநிலப் போராட்டத்தையே திசை திருப்பி, நல்ல முடிவுக்கு ஒரே நாளில் நம் அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் கொண்டுவந்த வரலாற்றை இங்கே போய் பார். (http://dharumi.blogspot.com/2005/10/83.html)

நியாயத்தின் பக்கம் நின்று பார்க்க இந்த வயதிலேயே திராணி இல்லாமல் போனால் நாளை என்ன நீ இங்கு சாதிக்கப் போகிறாய்? என்னதான் சாதித்துவிட முடியும்? இன்றைய internal marks உன்னைக் கட்டி போட்டுவிட்டதாகவே வைத்துக் கொள்வோம்; போராட்டம் நீண்டு செல்லும்போது சுயநலத்திற்காகவாவது நியாயத்தின் பக்கம் நீ நிற்க ஆரம்பித்திருந்தால் போராட்டத்தின் நியாயங்களும் வெற்றி பெற்றிருக்கும்; அதோடு உன் கல்லூரிப் படிப்புப் பிரச்சனையுமல்லவா முடிவுக்கு வந்திருக்கும். காசுக்கு விலைபோக என்றே எங்கும் எப்போதும் சிலர் இருப்பார்கள். அவர்களிலிருந்தாவது நீ வித்தியாசமாய் இருந்திருக்க வேண்டாமா? அப்படி காசுக்கு விலைபோனவர்கள் அநியாயத்தின் பக்கத்தில் நிற்பதைப் போல்தானே நீயும் நின்றுகொண்டு இருக்கிறாய்? அவனாவது புத்திசாலி; தன் தன்மானத்தை, சுயமரியாதையை "தைரியமாக" காசுக்கு விற்றுவிட்டு நெஞ்சை நிமிர்த்தி நின்று கொண்டிருக்கிறான். நீயோ "விலையும் போகாமல்", கொள்கைப் பிடிப்பும் இல்லாமல் வெறும் ஒரு 'கோழையாக" அல்லவா நின்று கொண்டிருக்கிறாய்.

ரத்தம் சூடாக இருக்கும் இந்த வயதிலேயே நீ இப்படி இருந்தால் ... எதிர்காலம் உன் போன்ற இளைஞர்களின் கைகளில் என்னும்போது அந்த எதிர்காலம் என் முன் பெரிய கேள்விக்குறியாகவே தெரிகிறது.

என்னமோ போ ...



*
Thanks for reading இன்றைய மாணவ நண்பனுக்கு சில வார்த்தைகள் ...

« Previous
« Prev Post

0 comments :

Post a Comment