Home » » உங்கள் சிந்தனைக்கு...

உங்கள் சிந்தனைக்கு...

அண்மையில் “A LETTER FROM FORMER PRINCIPAL, Dr. SUDHANANDHA” என்னும் தலைப்பில் அவருடைய கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. மிக அருமையாக தமிழிலே எழுதப்பட்ட அந்த கட்டுரைக்கு பெயர் குறிப்பிடப்படாத (anonymous) ஒரு விமர்சனம் வந்திருந்தது. அதனை ஒரு செய்தியாக இங்கே வெளியிடுகிறேன், உங்கள் பார்வைக்காக....

-blogger

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பதறிவு”

------------------------------------

பாவமன்னிப்பு தேடுகிறாரா திரு.சுதானந்தா அவர்கள்?

அமெரிக்கன் கல்லூரியில் தொடர்ந்து நடைபெற்று வரும் இப்பிரச்னைக்கு மூலகாரணம் மதுரை-இராமநாதபுர திருமண்டிலப் பேராயர் கிறிஸ்டோபர் ஆசீர் என்பது எல்லோரும் அறிந்ததே!

அமெரிக்கன் கல்லூரியை நிறுவித்த அமெரிக்க இறையடியார்கள் தங்களுடைய நீண்ட சுமார் 10 ஆண்டுகால சிந்தனைக்குப்பின் அமெரிக்கன் கல்லூரி முழுச்சுதந்திரமாக செயல்படவேண்டும். அதனால் பேராலயதிற்குத் தொடர்பில்லாது தனித்து இயங்கவேண்டும் என்று அமெரிக்கன் கல்லூரியை ஒரு தனி ‘society’யாக பதிவுசெய்தார்கள். . . இது வரலாறு...

வருடம் 1996.. திரு. பீட்டர் ஜெயபாண்டியன் முதல்வர் மற்றும் செயலராக பதவிக்காலம் முடிந்து புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படும் அந்த காலகட்டத்தில் திருமண்டிலப் பேராயராக இருந்தவர் திரு.தவராஜ் டேவிட அவர்கள். அப்போது, முதல்வர் மற்றும் செயலர் பதவிக்கு திரு.சுதானந்தா அவர்களுக்கும் திரு. தினகரன் மைக்கேல் அவர்களுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது. அனுபவம், கல்விப்பணி அடிப்படையில் இவ்விருவரில் யார் தகுதியானவர்கள் என்பது அப்போது பணியிலிருந்த அனைவருக்கும் தெரிந்ததே! இதில் மேற்கொண்டு சர்சையை திசைதிருப்ப விரும்பவில்லை.

அமெரிக்கன் கல்லூரியில் எத்தனையோ பேராயர்கள் உறுப்பினர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால், அமெரிக்கன் கல்லூரியைக் கைப்பற்றவேண்டும் என்று எந்தப்பேராயர்களுக்கும் வராத துணிச்சலும், ‘அமெரிக்கன் கல்லூரியின் அதிபதி’ தான் என்றும் ‘அதன் முதல்வர்கள் தனது காலடியில்’ என்ற மமதையும் இறுமாப்பும் திருமண்டிலப் பேராயர் கிறிஸ்டோபர் ஆசீருக்கு வர அடிப்படைக்காரணங்கள் என்ன?

அலசிப்பார்த்தால் எனக்குப் புலப்படும் சில மறுக்கப்படமுடியாத அமெரிக்கன் கல்லூரி வரலாற்றில் முதன்முறையாக அரங்கேறியச்சில முக்கிய நிகழ்வுகள் . . .


1. அமெரிக்கன் கல்லூரி வரலாற்றில் முதன்முறையாக ஆட்சி மன்றம் தேர்தல் நடத்தி முதல்வராக தேந்தெடுக்கப்பட்டவர் திரு.சுதானந்தா அவர்கள். அச்சமயம் நடைபெற்ற அந்த ஆட்சிமன்றக் குழு நடத்திய அந்தத்தேர்தலுக்கு முக்கிய காரணமானவர் அக்கூட்டத்தின் தலைவர் என்ற முறையில் பேராயர் அவர்கள். ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் வாக்களித்தபின் வாக்குகளை எண்ணி முடித்தபின் பேராயர், “ஒரு வோட்டு அதிகம் பெற்று” திரு.சுதானந்தா அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவித்தார். அப்போது பேராயர் அவர்கள் ஓட்டுச்சீட்டுகளை யாருக்கும் காட்டவில்லை (அப்படி காட்டச் சொல்லி பெரும்பான்மை உறுப்பினர்கள் கேட்காமல் கூட இருந்திருக்கலாம்). உண்மையில் என்ன நடந்தது என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!

தன்னைத் தேர்ந்தெடுத்த பேராயருக்கு நன்றிக்கடனாக (அல்லது முன்பே செய்த ஒப்பந்தத்தின்படி?) அமெரிக்கன் கல்லூரியை திருச்சபையை நோக்கி நகர்த்திச் சென்றவர், அமெரிக்கன் கல்லூரியை திருச்சபைக்கு ‘அடகு’ வைத்தவர் திரு.சுதானந்தா. இப்படி எண்ணங்கள் ஏற்பட முக்கியமாக இருந்த திரு.சுதானந்தா அவர்களின் செயல்பாடுகளை வருமாறு வரிசைபடுத்துகின்றேன்.


2. அமெரிக்கன் கல்லூரி வரலாற்றில் முதன்முறையாக முதல்வர் மற்றும் செயலர் “பதவி ஏற்பு விழா” என்று ஒரு புதுப் பழக்கத்தினை ஏற்படுத்தி முதன்முதலாகப் பேராயர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துகொண்டவர் திரு.சுதானந்தா.


3. அப்பதவி பிரமாணத்தின் போது அமெரிக்கன் கல்லூரி வரலாற்றில் முதன்முறையாக பேரயர் முன் மண்டியிட்டு ‘ஆசி’ பெற்றது திரு.சுதானந்தா. (இன்று பேராயர் தரப்பினர் வெளியுலகிற்கு கட்டமிட்டுக்காட்டுவது என்ன? ஏதோ பாரம்பரியமாக அமெரிக்கன் கல்லூரி முதல்வர்கள் பேராயர் முன் மண்டியிடுகிறார்கள் என்பது போல. திரு.சுதானந்தா அவர்களின் இந்த செயல் ஒரு கெட்ட முன் உதாரணமாகிவிட்டது).


4. திரு.சுதானந்தா அவர்கள் தனது பதவி ஏற்பு உரையில் ‘முக்கியமாக’ வெளியிட்ட ஒரு செய்தி “நான் அமெரிக்கன் கல்லூரிக்கும் திருமண்டிலத்திற்கும் பாலமாக இருப்பேன்” (“I will act as a bridge between the college and the diocese”) என்பது. இது எவ்வளவு ‘விஷமத்தனமான’ ‘கொடிய’ சொற்கள்! அமெரிக்கன் கல்லூரியை நிறுவனம் செய்த அமெரிக்க இறையடியார்கள் சிந்தனைக்கு இது முற்றிலும் புறம்பானது, மற்றும் எதிரானது.


5. எல்லாவற்றிக்கும் சிகரம் வைத்தாற்போல அமெரிக்கன் கல்லூரி வரலாற்றில் முதன்முறையாக திரு.சுதானந்தா அவர்கள் ஏற்படுத்திய மற்றொரு புதுப்பழக்கம் மிகவும் கொடியது.

திரு.சுதானந்தா தனது பதவிக்காலங்களில் பலமுறை அமெரிக்க நாட்டிற்குச் சென்றிருக்கிறார். குறிப்பாக இவர் பதவியிலிருந்த 5 ஆண்டுகளின் கோடை விடுமுறை காலங்களில் அதாவது, ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில், தனது சொந்த நலனுக்காக (அமெரிக்க மாணவர்களுக்கு தமிழ் சொல்லிக்கொடுத்து பணம் சம்பாதிக்க), முக்கிய பணிகளான புதிய மாணவர்கள் சேர்க்கைகளை (admission works) போன்றவற்றை ஓரங்கட்டிவிட்டு இந்த பயணங்களை மேற்கொண்டார்.

அவருக்கு முன் இருந்த எந்த ஒரு முதல்வரும் வெளிநாடு செல்லும் முன் தங்கள் ‘நீண்ட பணி விடுப்பிற்காக’ துணை கல்லூரிக் கல்வி இயக்குனரகத்திற்கு விண்ணப்பிக்கும் போது (ஆட்சிமன்றக் குழுவின் உறுப்பினரும், அக்கூட்டம் நடைபெறும் போது தலைமை வகிக்கும் பொறுப்பு மட்டுமே உள்ள) பேராயரிடம் “பணி விடுப்பிற்காக” ஒப்புதல் (கையெழுத்து) பெற்றதில்லை. அப்படி பேராயரிடம் ஒப்புதல் பெறவேண்டும் என்று ஆட்சிமன்ற சட்டதிட்டங்களிலும், தமிழக அரசின் சட்டதிட்டங்களிலும் விதிமுறைகள் இல்லை.

அப்படியிருக்க, ஒரு புதிய தவறான வழிமுறையை ஆரம்பித்துவைத்தவர் திரு.சுதானந்தா அவர்கள். அவர் வெளிநாடு செல்லும் போதெல்லாம் பேராயர் கிறிஸ்டோபர் ஆசீர் அவர்களிடம் கையொப்பம் பெற்று துணை கல்லூரிக் கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பிவைத்தார். இதுவே தற்போது சரியான பழக்கம்/வழக்கம் என்று பலர் எண்ணும் வகையில் அமைந்துவிட்டது! என்ன ஒரு தீயசெயல். . . திரு.சுதானந்தா செய்தது!


இவை எல்லாவற்றையும், அரங்கேற்றிவிட்டு தற்போது இப்படி ஒரு கட்டுரையையும் எழுதியிருப்பது. . . பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதுபோல் உள்ளது.

திரு.சுதானந்தா அவர்கள் செய்த இத்தகைய காரியங்கள்தான் தற்போதய பேராயர் கிறிஸ்டோபர் ஆசீரின் இப்போதய பேயாட்டங்களுக்கு முழுக்காரணங்கள்.


தான் செய்த தவறுகளுக்காக “பாவ மன்னிப்பு” தேடுகின்றாரா திரு.சுதானந்தா?

Thanks for reading உங்கள் சிந்தனைக்கு...

« Previous
« Prev Post

0 comments :

Post a Comment