Home » » காக்கப்பட வேண்டிய கல்விக் கோயில் - பேரா. சாமுவேல் லாரன்ஸ்

காக்கப்பட வேண்டிய கல்விக் கோயில் - பேரா. சாமுவேல் லாரன்ஸ்

*
அமெரிக்கன் கல்லுரி ...

பசுஞ்சோலை வளாகம்  
கவிபாடும் கட்டிடங்கள்
அறிவையும், பண்பையும்,சமூக உணர்வையும் மேம்படுத்தும் பேராசிரியர்கள்
மாணவர்- ஆசிரியரிடையே ஆரோக்கியமான நல்லுறவு ...

- இது போன்ற பல சிறந்த தனித்தன்மைகள் கொண்ட இக்கல்லூரி மதுரையின் பெருமைக்குரிய சின்னங்களில் ஒன்று. ஆனால் இக்கல்லூரி கடந்த ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக சிக்கல்களுக்குட்பட்டு சின்னா பின்னாமாவதைப் பார்த்து, அதன எதிர்காலமே கேள்விக்குறியாக இருக்கும் ஆபத்தை நினைத்து கல்லூரியின் முன்னாள், இந்நாள் முதல்வர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் இதன் இணையற்ற தொண்டிலும் வளர்ச்சியிலும் அக்கறையுடைய யாவரும் வேதனைப் படாமல் இருக்க முடியாது.

சில வரலாற்று உண்மைகள்:
அமெரிக்க நாட்டிலிருந்து வந்த கிறிஸ்தவ இறைத்தொண்டர்களின் அயரா உழைப்பினாலும் உன்னத தியாகத்தினாலும் 1881- ஆண்டில் முதலில் பசுமலையில் நிறுவப்பட்டது. இக்கல்லூரி பின்பு 1904-ல் மதுரைக்கு இடம் பெயர்ந்த பொழுது (இக்கல்லூரி) ‘உயர்கல்வியை சாதி, சமய வேறுபாடின்றி வழங்கும் ஒரு கிறித்துவ நிறுவ்னமாக இயங்கும்’ என்ற குறிக்கோளை முதல்வர் மறைதிரு ஜம்புரோ முன்வைத்தார். எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அக்குறிக்கோள் இன்றுவரை பின்பற்றப்பட்டு வருகிறது.

1934-ல் அது ஒரு பதிவு செய்யப்பட்ட சொசைட்டியாக மாற்றப்பட்டது. 1949-ல் கல்லூரி நிறுவப்பட காரணமாக இருந்த அமெரிக்க-மதுரா மிஷன் கல்லூரி, அதன் தனித் தன்மையுடன், தனி சொசைட்டியாகவே இயங்க அனுமதிக்கப்பட்டது. இன்றளவும் அப்படித்தான் இயங்கி வருகிறது. ஒரு முக்கியமான உண்மையை நாம் மனதில் கொள்ள வேண்டும். அமெரிக்கன் கல்லூரி துவக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை ஒரு போதும் திருச்சபைக்கு சொந்தமானதாக மாறவில்லை. அதன் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை.பரந்த மனப்பான்மையுடன், தொலைநோக்குப் பார்வையுடன் இறைத்தொண்டர்கள் உருவாக்கிய கல்லூரி சாசனத்திலும் (Constitution) விதிமுறைகளிலும் எந்த வித சந்தேகத்திற்கிடமின்றி தெள்ளத் தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றது இந்த உண்மை.

முதலில், திருச்சபையின்பேராயர், மதகுரு கல்லூரி ஆட்சிக்குழுவில் ஒரு சாதாரண உறுப்பினராகத்தானிருந்தார். ஆனால் காலப் போக்கில் கல்லூரியின் ‘சிறுபான்மை நிறுவனம்’ என்ற அடையாளத்தை உறுதி செய்வதற்காக அவருக்கு கெளரவத் தலைவர் பதவி  கொடுக்கப்பட்டது. ஆட்சிக் குழுக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கி அதை நடத்திக் கொடுப்பது மட்டுமே அவருடைய பொறுப்பு.  நிர்வாகத்தில் அவருக்கு எள்ளளவும் அதிகாரம் கிடையாது.  (இந்த உண்மையை உயர்நீதி மன்றமும் தனது தீர்ப்பு ஒன்றில் உறுதி செய்திருக்கிறது.) கல்லூரி முதல்வர்தான் செயலரும் கூட. நிர்வாகத்தின் பொறுப்பு எல்லாமே அவர் கையில்தான். இவை யாவும் கல்லூரி சாசனத்தில் உறுதியாகக் கூறப்பட்டிருக்கிறது.

இன்றைய சிக்கலுக்குக் காரணம்:
கல்லூரியின் 127- ஆண்டு வரலாற்றில் ஆட்சிக்குழுவில் இடம் பெற்றிருந்த தலைமைப் பதவி வகித்த பேராயர்கள் (Bishop) எல்லோருமே தங்களுடைய எல்லைக்குள்ளிருந்து கொண்டு தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பினைச் சிறப்பாகச் செய்தனர். நிர்வாகத்தில் தலையிட்டதே கிடையாது. கல்லூரியும் அமைதியாக, அழகாக, சிறப்பாக தன்னுடைய கல்விப்பணியை செவ்வனே செய்து வந்தது. அதன் புகழ் உலகெங்கும் பரவியது.
ஆனால் ...

இன்றையப் பேராயர் வரலாற்று உண்மைகளை மறைத்து கல்லூரிப் பாரம்பரியத்தையும் சட்ட திட்டங்களையும் காற்றிலே பறக்கவிட்டு ‘இக்கல்லூரி தென்னிந்திய திருச்சபைக்குச் சொந்தமான நிறுவனம், பேராயர் என்ற முறையில் என்னுடைய கட்டுப்பாட்டிற்குள்தான் அது இருக்கிறது’ என்றும் ‘கல்லூரி நிர்வாகத்திற்கு நான்தான் பொறுப்பு’ என்றும் தயங்காமல் பொய்களைக் கூறி மத உணர்வைத் தூண்டி தனது கைக்குள் கல்லூரியைக் கொண்டுவர வேண்டுமென்ற ஒரே நோக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

கல்லூரியை தங்களுடைய உழைப்பாலும் தியாகத்தாலும் உருவாக்கிய கிறிஸ்துவ இறைத்தொண்டர்களே சமுதாயத்தில் இது எல்லோருக்கும் உரியது என்ற உயரிய நோக்கில் ‘திருச்சபைக் கல்லூரி’ என்று குறுகிய வட்டத்துக்குள் அதைக் கொண்டுவராமல் தனித்து, சுதந்திரமாகச் செயல்படவேண்டும் என்று சிறந்த முடிவெடுத்து அதற்கு சட்ட வடிவமும் கொடுத்த பிறகு, பேராயர் இவற்றிற்கு எதிர்மாறாக மதத் தலைவர் என்ற போர்வையில் செயல்படுவது கல்லுரியை நிறுவிய இறைத்தொண்டர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்; கொடுமையாகும்; அவர்களது அறப்பணியை இழிவு படுத்துவதாகும். உண்மைக்கும் நீதிக்கும் போராட வேண்டிய மதத்தலைவர் அவற்றைக் குழி தோண்டிப் புதைக்கும் செயல்களில் ஈடுப்பட்டிருப்பது மிகவும் கொடுமை; கேவலம்.


போராட்டமும் உறுதியும்: 
கல்லூரியின் மேல் அளவில்லா அன்பும் பாசமும் கொண்ட முன்னாள், இந்நாள் முதல்வர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள்,மாணவர்கள் மற்றும் கல்லூரியின் பால் அக்கறை கொண்டோர் அனைவரும் கல்லூரியின் தனித்தன்மையைக் காக்க, அதன் கல்விப் பணியும் சமுதாயத் தொண்டும் தொடர எத்தகைய தியாகமும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். அதனால்தான் அநியாயம் இதுவரை வெற்றி பெறவில்லை.

இக்கல்லூரியில் குறுகிய எண்ணங்களுக்கும் அரசியல் தந்திரங்களுக்கும் இடமில்லை. ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்ற உயரிய நோக்குடன், சாதி, சமய எல்லைகளைக் கடந்து, மனித நேயத்திற்கு மதிப்பளிக்கும் கல்லூரி. தகுதிக்கும் திறமைக்கும் முன்னுரிமை அளிக்கும் கல்லூரி,. தன்னாட்சி முறை(Autonomous), பல புதிய பாடத்திட்டங்கள், பன்னாட்டு பல்கலைக் கழகங்களுடன் உறவு, சமூகப் பணித்திட்டங்கள் போன்ற பொருள் பொதிந்த உரமிக்க புதுமைகளைப் புகுத்தும் கல்லூரி.

எல்லாவற்றிற்கும் மேலாக, மாணவர்கள் ஆசிரியர்கள் உணர்வுடன், உயிருடன் இரண்டறக் கலந்து விட்ட, ‘உன்னதப் பண்புகளை, உயர் நெறிகளைப் பேணி வளர்க்கும் கல்விக்கோயில் இது.

கடமை:
மதுரையின் பெருமை மிக்க பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றாக விளங்கும் மதுரையின் அனைத்து மக்களுக்கும் உரிமையான அமெரிக்கன் கல்லூரியைப் பாதுகாக்கும் புனிதப் பணியில், உண்மை, நீதி, நியாயம், நேர்மை ஆகியவற்றில் அக்கறை கொண்ட அனைவரும் பங்கு பெறுவது, கல்லூரியை நிறுவிய தன்னலமற்ற அமெரிக்க இறைத்தொண்டர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி மட்டுமல்ல; அது நமது கடமையும் கூட.




*
Thanks for reading காக்கப்பட வேண்டிய கல்விக் கோயில் - பேரா. சாமுவேல் லாரன்ஸ்

« Previous
« Prev Post

0 comments :

Post a Comment