அமெரிக்கன் கல்லூரி
2001ல் இருந்து அமெரிக்கன் கல்லூரி, எங்களுக்கு இரண்டாவது வீடாக வாழ்வில் நுழைய ஆரம்பித்தது (உபயம்: பேராசிரியர் லாரன்ஸ், ஆங்கிலத்துறை). 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் பொதுநலமான எண்ணங்கள் நிறைந்த நன்மக்களால் இக்கல்லூரி உருவாகப் பெற்றது.
அமெரிக்கன் கல்லூரியில் உயிரியல் தளம் இயங்கும் கட்டிட்த்தின் பெயர், பிங்ஹாம்டன் ஹால். அமெரிக்காவிலுள்ள பிங்ஹாம்டன் என்ற கிராமத்தில் இருந்து, ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற பணத்தை அளித்ததால் உருவான கட்டிடமே உயிரியல் தளம் இயங்கும் பிங்ஹாம்டன் கட்டிடம்.
வெள்ளைக்கார போலீசார் உள்ளே வராமல் தடுத்த தன்னலமற்ற முதல்வர் இருந்தது, அக்காலம்.
மதுரையின் சமூக நலம் பேணும் முக்கியத் தலைவர்கள் வந்து உரையாற்றுகின்ற இடமாக இருந்தது.
பொது நலத்தினால் உருவானது அமெரிக்கன் கல்லூரி.
ஒவ்வொரு கல்லும் பொது நலத்தால் உருவானவை.
பொது நலனால் உருவாக்கப்பட்டக் கல்லூரியின் இன்றைய நிலை?
1. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, வணிகவியல் துறையில் சேர 1100 க்கும் மேல் மதிப்பெண் எடுக்க வேண்டும். 1100க்கு குறைவாய் மதிப்பெண் எடுத்தால், இடம் கிடைக்காதென்பது நிதர்சனம். ஆனால், 740 மதிப்பெண் பெற்ற மாணவன், பி. காம் ரெகுலரிலேயே சீட் கிடைக்கும் என்றான், அவனுக்கு இடமும் கிடைத்தது. அதிக மதிப்பெண் பெற்ற திறமைவாய்ந்த மாணவர்கள், வேறு கல்லூரிகளுக்கு போவார்கள். ஆதலால், இக்கல்லூரியில் இடம் சுலபமாய் கிடைக்கும் என்ற எண்ணம் உண்மையானது. அவனுக்கு இடமும் கிடைத்தது.
2. தற்பொழுது முதுகலை அறிவியல் வகுப்புகளுக்கு நுழைவு தேர்வு வைப்பதில்லை. மிக குறைந்த மதிப்பெண் பெற்றவருக்கு, முதுகலை அறிவியலில் இடம் கிடைத்துள்ளது.
3. வெள்ளி அன்று ஒரு அமெரிக்கன் கல்லூரி பேராசிரியரை சந்தித்துப் பேசினேன். அமெரிக்கன் கல்லூரி முதுகலை அறிவியல் (துறை வேண்டாம்) வகுப்பில் இரண்டு, மூன்று பேர் மட்டுமே சேர்ந்து உள்ளனர் என்று தெரிவித்தார்.
பத்து ஆண்டுகள் முன்பு வரை, இடம் கிடைப்பதே பெரிய விடயமாய் இருந்த கல்லூரியின் நிலை, இன்று தகுதி குறைவாய் உள்ள மாணவர்களுக்கான இடமாகி விட்ட்து.
அமெரிக்கன் கல்லூரியில், மாணவர்களுக்கிடையே மார்ச் மாதத்தில் கல்லெறிச் சம்பவம் நடந்த போது, உணர்ச்சி ஏற்பட்டு முன்னாள் மாணவர்கள், நியாயம் கேட்டு வருவார்கள், துணை நிற்பார்கள் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதிகமாக யாரும் வரவில்லை.
கல்லூரியை மீட்பதற்கு சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த மாணவர்களைப் பார்ப்பதற்கு வெறும் இருபது மாணவர்களே வந்தனர். பொது நலனுக்காக உண்ணாவிரதம் இருந்தோரைப் பார்ப்பத்ற்குக் கூட முன்னாள் மாணவர்கள் வரவில்லை.
பிற மனிதர் துன்புறும்போது, மனிதரால் மட்டுமே அதை உணர முடியும். சிங்கம், சிம்பன்சி, குரங்கு மற்றும் வேறு எந்த விலங்காலும் உணர முடியாது. இதுவே மனிதனுக்கு முக்கியமான பண்பு. நவீன கால மனிதர்கள், மனிதனுக்குரிய அடிப்படைப் பண்பிலிருந்து விலகிவிட்டார்கள். நாம் எவ்வாறு மனிதர்களாக இருந்தும், மனித தன்மையற்று இருக்க ஆரம்பித்தோம் என்று தெரியவில்லை.
கல்லூரிக்காக ஏழு பேர் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்தபோதும், அதன் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, நாம் அனைவரும் உணவு உட்கொண்டோம்.
நாம் எவ்வாறு உணவு உட்கொண்டோம்? குற்ற உணர்ச்சி ஒருவருக்கும் வரவில்லையா? நாம் எவ்வாறு, எந்த விதமான குற்ற உணர்ச்சிக்கும் ஆட்கொள்ளாமல் இருக்க ஆரம்பித்தோம்?
இந்த உலகமய உலகில் பல பேருக்குத் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே நேரம் சரியாக இருக்கின்றது, இதில் பிற மனிதர்கள் பற்றியும், கல்லூரியைப் பற்றி எல்லாம் சிந்திக்கலாமா? இன்றைய சமூக அமைப்பும், மக்களின் மன நிலையும் சுய நலமாய் உள்ளது. சுய நலமாய் பின்னப் பட்டுள்ளது. சிறிது துன்பம் கூட, தனக்கு நேரக் கூடாது, அந்தத் துன்பத்தை எதிர் கொள்ளும் அளவிற்கு அல்ல, நினைக்கக் கூட யாரும் தயாராக இல்லை.
பொது நலனுக்காகவும், பிற மனிதர் துன்புறும்போது என்ன செய்ய வேண்டும் என்று கம்பெனிகளுக்கு அக்கறை இல்லை. கம்பெனிகளுக்கு அக்கறை இல்லை என்றால் நமக்கு ஏன் அக்கறை? ஏனென்றால், நாமெல்லாம் கம்பெனிகளுக்காக உருவாக்கப் பட்டவர்கள் தானே? கம்பெனியில் பணிபுரிவதைத் தவிர வேறேதும் சிந்திக்காமல் இருப்பது தானே, கம்பெனிக்குத் தேவை. அவ்வாறே நாமும் உருவாகி விட்டோம் அல்லவா?
தான், இன்று உருவாவதற்கு அமெரிக்கன் கல்லூரியும் ஒரு காரணம் என்பதை ஏன் மறந்து விட்டனர். நம் வீட்டிற்கு துன்பம் வந்தால், எவ்வாறு நம்மால் அமைதியாய் இருக்க முடியும்? அமெரிக்கன் கல்லூரிக்குத் துன்பம் வந்த பின்பும் எவ்வாறு அமைதியாக இருக்க ஆரம்பித்தோம்? எவ்வாறு நம்மை நாமே சமரசம் செய்து கொண்டோம்?
ஒரு வேளை, இந்த கல்லூரி இல்லை என்றால் வேறோரு கல்லூரியில் நாம் படித்திருப்போம் என்ற நினைப்பு காரணமா?
இந்த உண்மை, எதற்காக அமெரிக்கன் கல்லூரி மிஷனரிகளுக்கு புரியாமல் போனது? அவர்கள் ஏன் இங்கே வந்து கல்லூரி கட்ட வேண்டும்?
போராட்டம் இன்றி, உணர்ச்சியின்றி நாம் இன்று பொருட்கள் போல வாழ்வதற்கு மிக முக்கிய காரணம், மேற்கத்திய கல்வி முறை தான். நவீன கால மனிதர்களுக்கு, இன்றைய மேற்கத்திய கல்வியும், கலாச்சாரமும் பெறுவதற்கு மட்டுமே சொல்லி தருகின்றது. நாம் பெற்றதை, மீண்டும் வேறொருவற்கு அளிப்பதற்கும், தாம் பெற்றதை திருப்பித் தருவதற்கும் சொல்லித் தருவதில்லை.
அமெரிக்கன் கல்லூரியில் இருந்து பெற்றதை முன்னாள் மாணவர்கள், ஏன் திருப்பித் தர முன் வரவில்லை?
ஒரு ஆண்டில், ஒரு நாள் கூட தன்னை உருவாக்கிய கல்லூரிக்கு செலவளிக்க வேண்டும் என்று ஏன் எண்ணம் வரவில்லை. மேலை நாட்டில், தான் கற்றக் கல்வி நிலையங்களுக்கும், பள்ளிகளுக்கும் தன் சொத்தை எழுதி வைக்கின்றனர். இங்கு ஒன்றிரண்டு பேர் இருக்கலாம், அவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஏன் அவ்வாறு தமிழ் நாட்டில் இல்லாமல் போனது?
ஈகை, கொடை, வள்ளல் என பெயரிட்டு வந்த தமிழர் குணங்களெல்லாம் இன்று காணாமல் போய்விட்டன. அமெரிக்கன் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் எத்துணை பேர் பொது நல வழக்கு போட்டனர்? பொது நல வழக்கு போடா விட்டாலும் பரவாயில்லை. உண்ணாவிரதம் இருந்த மாணவர்களைச் சந்திக்கக் கூட மனம் வரவில்லையா?
உணர்ச்சிகளே இல்லாமல், கம்பெனிகளின் லாபத்திற்காகவும், கம்பெனிகள் உருவாவதற்கும், கம்பெனிகளுக்காக வாழ்வதும் தான், நம்முடைய வாழ்க்கை லட்சியமா?
”நம்மால் என்ன செய்ய முடியும்? ஒன்றும் செய்ய முடியாது. நான் வந்தால் எல்லோரும் வருவார்களா?”
இந்த மாதிரி எண்ணங்களுடம் நிறைய பேர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். இவ்வாறான எண்ணங்களுடன் வாழ்ந்து, எந்தவிதமான செயலிலும் இறங்காமல், மனத்திலே பேசி, முடிவு மேற்கொண்டு வாழ்வது, வெள்ளையின ஆட்சி மனோபாவம். அது, இன்றும் தொடர்வது பரிதாபத்திற்குரியது. கம்பெனிகளுக்கு வாழ்வது, கம்பெனிகளுக்கு உழைப்பது என்ற வெள்ளையின ஆட்சியின் பொது புத்தியே இன்றும் செயல்படுகின்றது என்பது நிதர்சனமான உண்மை. அடிமைகள், பிற அடிமைகளுக்கு உதவி செய்யாது. அன்று ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக எதிர்த்து பேசினால், போராடினால், தூக்கு, சிறை. வெகு சில மக்களேப் போராடினர், சிறைச் சென்றனர், மாண்டனர்.
பொதுநலத்திற்காக வாழ்வது, சுய நல வாழ்விற்கு எதிரானது என்பதை மக்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளனர். இங்கு அறிவும், திறமையும் சுய நலத்திற்குத் தான் பயன்படுகின்றதே ஒழிய, பொது நலத்திற்கு அல்ல.
பொது நலம் இல்லையென்றால், இச்சமூகத்தில் எவ்வித நியாயமும், உரிமையும் கிடைத்திருக்காது என்ற எளிய உண்மையை யாரும் உணர வில்லை, தெரியப் படுத்தவும் இல்லை, தெரியப்படுத்தினாலும், அதைத் தெரிந்து கொள்ள யாரும் ஆர்வம் காட்டுவதும் இல்லை. தெரிந்து கொள்ளாவிடினும் கவலை இல்லை.
நன்றி உணர்ச்சி, பிற மனிதருக்கு உதவுவது எல்லாம் கம்பெனிகளின் உற்பத்தியைப் பாதிக்கும். வேலையின் அளவு நேரத்தைக் குறைக்கும். என்ன அநியாயம் நடந்தாலும், எது எக்கேடு கெட்டாலும், எனக்கு வேலை முக்கியம். என் அலுவல் முக்கியம். எனக்குச் சமூகக் கடமை, அக்கறை, பொறுப்புணர்ச்சி, நன்றி உணர்ச்சி, இது எல்லாம் எனக்குத் தேவை இல்லாத சொற்கள். நகர மய வாழ்வில், எரிச்சல் படுத்தும் சொற்கள், இதையெல்லாம் நான் கேட்கவிரும்பவில்லை. அதற்கெல்லாம் எனக்கு நேரம் இல்லை. உணர்ச்சியற்று இருப்பதையே அனைவரும் வாழ்க்கையாய் எண்ணுகின்றனர். அவ்வாறே வாழ விரும்புகின்றனர் என்பது வெட்கக்கேடானது.
இவ்வளவு எழுதியும், கேள்வி கேட்டாலும், மக்களும், முன்னாள் மாணவர்களும் அமெரிக்கன் கல்லூரி பிரச்சினைக்காகப் பயணிக்கப் போகின்றனரா, மாற போகின்றனரா! என்றால் ”இல்லை” என்ற பதிலே மிஞ்சும்.
பகத் சிங் 1930களிலேயே மக்களின் அறியாமையும், இயலாமையும் கேள்வி கேட்டுத் துளைத்து எடுத்து ”கேளாத செவிகள் கேட்கட்டும்” என்ற தலைப்பில் மக்களின் மோசமான மனநிலையை எழுதினார். அன்றிலிருந்து இன்று வரை, மக்கள் சுய நலப் பேயால் சூழப் பட்டுள்ளனர். எதற்காகவும், எவ்வளவு துன்பம் பிறருக்கு நேர்ந்தாலும் அவரவருக்கான வேலையில் இருந்து பின் வாங்கப் போவது இல்லை என்பதில் மட்டும் உறுதியாய் உள்ளனர்.
Karthikeyan. R.
Research Fellow
Centre for Excellence in Genomics Studies
Department of Animal Behaviour & Physiology
School of Biological Sciences
Madurai Kamaraj University
Madurai
India
99946 32535
0 comments :
Post a Comment