Home » » மதுரை அமெரிக்கன் கல்லூரி பிரச்னைக்குத் தீர்வு - மதுரை காமராஜர் பல்கலை. கல்விப் பேரவை கூட்டத்தில் உறுதி

மதுரை அமெரிக்கன் கல்லூரி பிரச்னைக்குத் தீர்வு - மதுரை காமராஜர் பல்கலை. கல்விப் பேரவை கூட்டத்தில் உறுதி

தினமணி, 21-03-2012
மதுரை, மார்ச் 20: 
மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் பருவத் தேர்வை எழுதவும், அவர்களுக்கு சான்றிதழ்கள் கிடைக்கவும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்கும் என, கல்விப் பேரவைக் கூட்டத்தில் உறுதி தெரிவிக்கப்பட்டது.
 மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்விப் பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை பதிவாளர் (பொறுப்பு) மு. ராஜியக்கொடி முன்னிலையில், ஆட்சிக்குழு உறுப்பினர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது.
 இக்கூட்டத்தில் மதுரை அமெரிக்கன் கல்லூரி விவகாரத்தில், பல்கலைக்கழகம் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, 2011 நவம்பர் மற்றும் 2012 ஏப்ரல் பருவத்தேர்வை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி தெரிவிக்கப்பட்டது.
 மதுரை அமெரிக்கன் கல்லூரி விவகாரம் குறித்து முதல் ஒத்திவைப்பு தீர்மானமாக கொண்டு வந்து முனைவர் கே.அழகேசன் பேசியதாவது: 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த அமெரிக்கன் கல்லூரியில் மாணவர்களுக்கு 2011 நவம்பர் மாதத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. பல்வேறு கோரிக்கைகளுக்கு பின்னர், 2011 மார்ச் மாதத் தேர்வுகள் பல்கலைக்கழகம் அமைத்த குழு மூலம் நடைபெற்றன. அதேபோல, 2011 நவம்பர் மற்றும் 2012 ஏப்ரல் தேர்வையும் பல்கலைக்கழகம் குழு அமைத்து நடத்த வேண்டும்.
 இக் கல்லூரியில் 2010 மார்ச் மாதம் பிரச்னை ஏற்பட்டது. கல்லூரியில் முறையான முதல்வர், செயலாளர் இல்லை. இதனால், 16 மாதங்கள் பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் சம்பளமின்றி தவித்தோம். அரசு தலையிட்டதால், தற்போது பேராசிரியர்களுக்கு சம்பளம் வருகிறது. ஆசிரியர் அல்லாதோர் உள்ளிட்ட 73 பேருக்கு, 18 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. முறையான முதல்வர் அறிவிக்கப்பட்ட பின்னர்தான், இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.
 கடந்த 2 ஆண்டுகளாக கல்லூரியில் 2 முதல்வர்கள், 2 துணை முதல்வர்கள் போன்றவற்றால் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகிறோம். இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.   2011 மார்ச் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்படவில்லை. பல்கலைக்கழகம் தலையிட்டு மாணவர்கள் எழுதிய தேர்வுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கவும், நடைபெறாத தேர்வுகளை குழு மூலம் நடத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
 முனைவர் ராஜசேகரனும் இதே கருத்தை வலியுறுத்தினார்.
 முனைவர் முரளி: அமெரிக்கன் கல்லூரி விவகாரம் தொடர்வது பல்கலைக்கழகத்தின் இயலாமையை பதிவு செய்து வருகிறது. அந்தக் கல்லூரியில் படித்த 50-க்கும் மேறபட்ட மாணவர்கள், எங்கள் கல்லூரியில் மதுரைக்கல்லூரி முதுகலை படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். மதிப்பெண் சான்று இல்லாமல் அவர்கள் கல்லூரியில் சேரமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாணவர்களுக்கு உடனடியாக மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட வேண்டும்.
 முனைவர் அழகப்பன்: அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் தேர்வு விவகாரத்துக்கு தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டும். இந்த மாமன்றத்தில் ஒரு குழுவை அமைத்து, தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண் பட்டியல் வழங்க வேண்டும். தேர்வுகளை உடனடியாக நடத்த வேண்டும்.
 முனைவர் பெரியதம்பி: இப்பிரச்னை குறித்து ஆட்சிக்குழு, ஆட்சிப்பேரவை, துணைவேந்தர் என அனைத்து தரப்பிலும் தீர்க்கமான முடிவு எடுக்கப்படாதது வேதனைக்குரியது.
 முனைவர் மனோன்மணி: அமெரிக்கன் கல்லூரிப் பிரச்னை தொடரக் கூடாது. விரைவில், அக்கல்லூரியில் அமைதியான சூழல் ஏற்பட்டு மாணவர்கள் கல்வி கற்க வகை செய்ய வேண்டும்.
 முனைவர் அசோகன்: இக்கல்லூரி விவகாரத்துக்கு இம்மன்றத்திலேயே தீர்வு எட்டப்பட வேண்டும். அதை ஆட்சிக்குழு, ஆட்சிப் பேரவையில் தீர்மானமாக கொண்டு வரவேண்டும்.
 இந்த விவாதங்களுக்கு பதிலளித்து கல்விப்பேரவை சார்பில் ஆட்சிக்குழு உறுப்பினர் பிடி மனோகரன் பேசியதாவது: அமெரிக்கன் கல்லூரி விவகாரம் தொடர்வது வேதனையளிக்கிறது.
 அக்கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு நடத்த பல்கலைக்கழகம் முயற்சி எடுக்கும். அனைத்து மாணவர்களுக்கும் ஒரேமாதிரியான தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். 2011 ஏப்ரலில் நடைபெற்ற தேர்வுக்கு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று கிடைக்கவும், 2011 நவம்பர் மற்றும் 2012 ஏப்ரலில் தேர்வு நடத்த விரைவில் முயற்சி எடுப்போம் என உறுதியளிக்கிறேன் என்றார். 
Thanks for reading மதுரை அமெரிக்கன் கல்லூரி பிரச்னைக்குத் தீர்வு - மதுரை காமராஜர் பல்கலை. கல்விப் பேரவை கூட்டத்தில் உறுதி

« Previous
« Prev Post

0 comments :

Post a Comment