தினமணி மதுரை, டிச. 22
அமெரிக்கன் கல்லூரி முதல்வர் நியமனப் பிரச்னையில் உயர்கல்வித் துறையில் உள்ள அதிகாரி ஒருவர் தவறான வழிகாட்டுதல் மூலம் பிரச்னையைத் திசை திருப்புவதாக கல்லூரிப் பேராசிரியர்கள் புகார் கூறுகின்றனர்.
இதுகுறித்து, மதுரை அமெரிக்கன் கல்லூரி சுயநிதிப் பிரிவு டீனும்,பேராசிரியருமான கே. அன்புநாதன் தினமணி செய்தியாளரிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
மதுரை அமெரிக்கன் கல்லூரியின் விதிமுறைப்படியே முதல்வர் பொறுப்பானது, டாக்டர் அன்புதுரையிடம் முன்னாள் கல்லூரி முதல்வரால் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து நிர்வாகக் குழுவிலும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
ஆனால், மதுரை மண்டல கல்லூரிக் கல்வித்துறை இணை இயக்குநர் அலுவலகத்திலிருந்து, அமெரிக்கன் கல்லூரி முதல்வர் நியமனம் குறித்து, விதிய மீறி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். சென்னையில் மாநில உயர் கல்வித்துறை இயக்குநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அவர் கோரிக்கையைப் பரிசீலித்து நியாயமான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
அமெரிக்கன் கல்லூரிப் பிரச்னையைப் பொறுத்தவரையில், நிதிப் பிரிவில் உள்ள அதிகாரி ஒருவர் சம்பந்தமில்லாமல் அமெரிக்கன் கல்லூரி பிரச்னையில் தலையிட்டு வருகிறார்.
அந்த அதிகாரியின் தவறான வழிகாட்டலால்தான், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் தவறான சில உத்தரவுகளை பிறப்பித்திருப்பதும் தெரியவந்துள்ளது. இப்படித் தவறான வழிகாட்டலில் ஈடுபடும் உயர்கல்வித் துறையின் நிதிப்பிரிவு அதிகாரி, மதுரை பேராயர் தரப்பினருக்கு உறவினர் என்றும் கேள்விப்படுகிறோம்.
ஆகவே, உறவுகளுக்காகவும், சென்னையில் உள்ள ஒரு பேராயர் சிபாரிசுக்காகவும், பல்லாயிரக்கணக்கான மாணவர் பயிலும், பாரம்பரியமிக்க அமெரிக்கன் கல்லூரி நலனை புறக்கணித்து தவறாக அரசுத்துறை செயல்படுத்தப்படுவது சரியல்ல என்றார்.
முன்னதாக, கல்லூரி முன் பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
0 comments :
Post a Comment