தினமணி மதுரை, டிச. 28
மதுரை, டிச. 28: நாலாயிரம் மாணவர்கள் பயிலும் அமெரிக்கன் கல்லூரியை தனியார் ஆக்கிரமிப்பதைத் தடுத்து நிறுத்திட தமிழக அரசு முன்வர வேண்டும் என அக்கல்லூரியின் முன்னாள் முதல்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையின் அடையாளங்களுள் ஒன்றான அமெரிக்கன் கல்லூரியில் கடந்த சில ஆண்டுகளாக நிர்வாக ரீதியில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. கல்லூரி முதல்வர் நியமனத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னையால் தற்போது அங்கு பயிலும் சுமார் 4 ஆயிரம் மாணவ, மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கல்லூரியின் சட்ட விதிகளுக்கு புறம்பாக தென்மண்டல திருச்சபை பேராயர் தரப்பினர் கல்லூரி நிர்வாகத்தில் தலையிட்டு பிரச்னை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இப்பிரச்னையில் நியாயம் யார் பக்கம் எனத் தெளிவாகத் தெரிந்தும் தமிழக அரசு பிரச்னையைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தவில்லை என்றும் அக்கல்லூரியின் முன்னாள் மாணவர்களும், பொதுநல விரும்பிகளும் ஆதங்கப்படுகின்றனர்.
இந்தநிலையில் அமெரிக்கன் கல்லூரியில் சுமார் 38 ஆண்டுகள் பணிபுரிந்து, அதில் 14 ஆண்டுகள் கல்லூரி நிதிக் காப்பாளராகவும், 6 ஆண்டுகள் கல்லூரி முதல்வராகவும் இருந்த பேராசிரியர் பி.டி.செல்லப்பாவும்,
34 ஆண்டுகள் பணிபுரிந்து, அதில் 11 ஆண்டுகள் கல்லூரி முதல்வராக இருந்த பீட்டர் ஜெயபாண்டியனும் செய்தியாளர்களைச் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
அமெரிக்கன் மிஷன் அமைப்பால் இக்கல்லூரி கடந்த 1881 -ல் பசுமலையில் தொடங்கப்பட்டது. பின்னர் பெரியார் பஸ் நிலையம் அருகே யூ.ஜி.பள்ளி வளாகத்தில் செயல்பட்டது. அதன்பின் தற்போதைய கோரிப்பாளையம் பகுதிக்கு கல்லூரி வந்தது. ஆரம்பத்திலிருந்தே கல்லூரி முதல்வர்தான் சகல அதிகாரத்துடனும் கல்லூரியை நடத்தி வந்தார். மிஷனரியைச் சேர்ந்த பாதிரியார்கள் இருவர் கல்லூரி நிர்வாகத்துக்கு உதவிகரமாக இருந்துள்ளனர். (ஆரம்ப க்கட்டங்ககளில் ... C.S.I நிறுவப்படுவதற்கு முன்...)
இதையடுத்து கல்லூரி சுதந்திரமாகச் செயல்படும் வகையில் 1931 ஆம் ஆண்டு கல்லூரி நிர்வாகக் குழு ஏற்படுத்தப்பட்டது. அதன்படியே கல்லூரி நிர்வாகக் குழுவின் செயலராக கல்லூரி முதல்வர் இருக்கவும், அக் குழுவில் 13 உறுப்பினர்களும் சேர்க்கப்பட்டனர்.
இந்த உறுப்பினர்களில் கல்லூரி முதல்வர், உதவி முதல்வர்,நிதிக் காப்பாளர், மிஷனரி உறுப்பினர்கள், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பிரதிநிதி, தென்னிந்திய திருச்சபை கூட்டுக் குழு பிரதிநிதி, கல்வியாளர் உள்ளிட்டோர் இடம் பெறுவர்.
கல்லூரி முதல்வர் தனது பதவிக்காலம் முழுவதுமே செயலராக நீடிப்பார். மற்ற உறுப்பினர்கள் 2 ஆண்டுகளுக்கு பதவி வகிப்பர். இத்தகைய ஆட்சிக் குழு முழுத் தன்னாட்சி அதிகாரம் பெற்றதாகும். இந்த ஆட்சிக் குழுதான் சொசைட்டி சட்டத்தின்கீழ் 1934 ல் அரசிடம் பதிவு செய்யப்பட்டது. ஆட்சிக் குழுவைக் கூட்ட அதிகாரம் கல்லூரி முதல்வரான செயலருக்கு மட்டுமே உண்டு.
இந்த நிலையில் 1947 ஆம் ஆண்டு தான் தென்னிந்திய திருச்சபை உருவானது. இதன் முதல் பிஷப்பாக நியூபிகின் இருந்தார். சிறந்த கல்வியாளரான அவரைக் கவுரவிக்கும் வகையில்தான் கல்லூரி ஆட்சிக் குழுவில் உறுப்பினராக அவர் அமர்த்தப்ப்டடார்.
கல்லூரி நிர்வாகத்தில் எப்போதும் அவர் தலையிட்டதே இல்லை. ஆட்சிக்குழு கூடும்போது, கூட்டத்திற்கு மதிப்புக்குரியவர் தலைமை ஏற்கவேண்டும் என்ற வகையில்தான் திருச்சபை பிஷப்பை கூட்டத்துக்கு மட்டும் தலைவராக்கியுள்ளனர். ஆகவே திருச்சபை நிர்வாகத்துக்கும் கல்லூரி நிர்வாகத்துக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை. பீட்டர் ஜெயபாண்டியன் கல்லூரி முதல்வராக இருந்தபோது, போத்திராஜுலு, தவராஜ் டேவிட் ஆகியோர் திருச்சபை பிஷப்புகளாக இருந்துள்ளனர். இருவரும் கல்லூரி முதல்வர், செயலர் பதவிக்கு மிகுந்த மரியாதை அளித்தே நடந்துகொண்டுள்ளனர்.
போத்திராஜுலு பிஷப்பாக இருந்தபோது கல்லூரி விரிவுரையாளர் பதவிக்கு அவரது மகன் விண்ணப்பித்தார். ஆனால், நேர்முகத் தேர்வில்கூட அவரை கலந்துகொள்ள போத்திராஜுலு அனுமதிக்கவில்லை. பிஷப் எனும் பதவியை தவறாகப் பயன்படுத்தி கல்லூரியில் தனது மகன் பணி வாய்ப்பை பெற்றுவிடக்கூடாது என்றே அவர் கருதினார்.
பீட்டர் ஜெயபாண்டியன் முதல்வராக இருந்து பணிக்காலம் முடிந்தபோது, அவரே பணிக்கால நீடிப்புக்கு விண்ணப்பத்தை அனுப்பினார். அது ஏற்கப்பட்டது. ஆகவே இப்போது கல்லூரி முதல்வருக்கு பணிநீட்டிப்புத் தராதது சரியல்ல.
கல்லூரி முதல்வரை தேர்வு செய்யும்போது கூட ஆட்சிக் குழுவின் 3 உறுப்பினர் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்படும். இக்குழுவில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் இடம்பெறக்கூடாது என்பது விதி. ஆனால், கல்லூரி முதல்வர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள், கல்லூரியின் முதல்வர், செயலர் அலுவலகத்துக்குத்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்பதும் கல்லூரியின் விதிமுறையாகும்.
ஆக அமெரிக்கன் கல்லூரியின் விதிமுறைப்படி கல்லூரி முதல்வர், செயலர்தான் கல்லூரியை நிர்வகிக்க முடியும். இதில் திருச்சபை பிஷப் எவ்விதத்திலும் தலையிடமுடியாது. திருச்சபை நடத்தும் கல்வி நிறுவனங்களின் பட்டியலில் கூட டோக் பெருமாட்டி கல்லூரியும், அமெரிக்கன் கல்லூரியும் இடம்பெற்றிருக்கவில்லை. ஆனால், இந்த நடைமுறைக்கு எதிராக தற்போது எழுந்துள்ள பிரச்னையானது மிகவும் வேதனை அளிக்கிறது. கல்லூரியானது கல்வித் துறை சம்பந்தப்பட்ட பேராசிரியர்களைக் கொண்ட ஜனநாயக முறையில் இயங்கும் ஆட்சிக் குழுவால் நிர்வகிக்கப்பட்டாலே நல்லது. அதைவிடுத்து தனிநபர் செயல்பாட்டுக்கு ஏற்ப கல்லூரி நிர்வாகம் அமைவதற்கு வழிவகுப்பது, அதை தனியார் ஆக்கிரமிக்க துணைபோவதாகவே அமையும். கல்லூரியின் செயல்பாடும், விதிமுறையும் தெளிவாக வகுக்கப்பட்டிருக்கும் நிலையில் அதில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் பிஷப் உள்ளிட்டோர் தலையிடுவதை அரசு வேடிக்கை பார்ப்பது என்பது பாரம்பரியமிக்க கல்லூரியின் செயல்பாட்டை சீர்குலைப்பதாகவே அமையும்.
மேலும், பல அறிஞர்களையும், ஆராய்ச்சியாளர்களையும், சிறந்த ஆசிரியர்களையும் உருவாக்கிய கல்லூரியை முடக்கும் வகையிலும் சிலர் செயல்படுவதை அரசு வேடிக்கை பார்ப்பது அவர்களுக்கு துணைபோவதற்குச் சமமாகும் என்பதே எங்களது கருத்து.
எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் தமிழக முதல்வரும், அரசும் அமெரிக்கன் கல்லூரிப் பிரச்னையை மாணவர் நலன் கருதி தீர்க்க கல்லூரி ஆட்சிக் குழுவின் விதியை அறிந்து அதன்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.
0 comments :
Post a Comment