Home » » அமெரிக்கன் கல்லூரி பேராயர் தரப்பு பொறுப்பு முதல்வரின் நியமனத்துக்கு கல்லூரிக் கல்வி இயக்குநரகம் ஆணை வழங்கவில்லை

அமெரிக்கன் கல்லூரி பேராயர் தரப்பு பொறுப்பு முதல்வரின் நியமனத்துக்கு கல்லூரிக் கல்வி இயக்குநரகம் ஆணை வழங்கவில்லை

Tamil Morning News paper Thinamani dated 24-03-2011 page 4

அமெரிக்கன் கல்லூரி பேராயர் தரப்பால் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு முதல்வர் நியமனத்துக்கு கல்லூரிக் கல்வி இயக்குநரகம் நியமன ஆணை வழங்கவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவலில் தெரியவந்துள்ளது என்று அமெரிக்கன் கல்லூரி ஆட்சிமன்ற விதிகள் பாதுகாப்பு செயல்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து அக்குழுவின் தலைவர் பி.டி.செல்லப்பா, ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், துணைத் தலைவர் செயலர் வின்பிரட் தாமஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:

மதுரையின் பெருமையாக விளங்கிவரும் 130 ஆண்டுகள் பழமையான அமெரிக்கன் கல்லூரியானது சிஎஸ்ஐ திருமண்டிலத்துக்குச் சொந்தமானதல்ல. அமெரிக்கன் கல்லூரிச் சொத்து அனைத்துமே சட்டப்படி கல்லூரி ஆட்சி மன்றக் குழுவுக்குச் சொந்தமானது.

பேராயர், ஆட்சி மன்றக் குழுவுக்குத் தலைமை தாங்கும் உரிமை மட்டுமே உண்டு. பேராயர் கல்லூரியின் தாளாளர் அல்ல. அவர் சட்ட விஷயங்களில் கல்லூரியின் ஆட்சிமன்றக் குழுவின் பிரதிநிதியாக இருக்க முடியாது. கல்லூரியில் எந்தப் பதவிக்கும், நியமனம் செய்யும் அதிகாரம் அவருக்குக் கிடையாது.

முதல்வர் பதவிக்கு யாரையுமே நேரடியாக நியமிக்கும் அதிகாரம் அவருக்கு நிச்சயமாக இல்லை.

இக்கல்லூரியானது சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட கல்லூரியாகும். கல்லூரியை நிர்வகிக்கும் அனைத்து அதிகாரமும் கல்லூரி முதல்வர் மற்றும் செயலருக்கே உள்ளது. பேராயர் கிறிஸ்டோபர் ஆசீர் தரப்பினர் மூலம் கல்லூரியின் பொறுப்பு முதல்வராகவும், செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ள ஆர்.மோகன் நியமனத்துக்கு கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளதாக பேராயர் தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் விண்ணப்பித்துப் பெறப்பட்டுள்ள தகவலில் அதுபோன்ற ஒரு நியமன ஆணை அளிக்கப்படவில்லை என்று தெரிவந்துள்ளது.

இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, பொறுப்பு முதல்வருக்கான நியமன ஆணைகள் இந்த அலுவலகத்தில் வழங்கப்படுவதில்லை என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட பதிலில் தகவல் கிடைத்துள்ளது.

இதிலிருந்து பேராயர் கிறிஸ்டோர் ஆசீர் தரப்பினரின் பொய்யான தகவலைக் கூறி வருவது தெரியவந்துள்ளது.

ஆகவே அரசு, தான் அமைத்த உயர்நிலைக் குழுவின் மூலம் உடனடியாக இந்தப் பிரச்னையில் தலையிட்டு இச்சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டும் அல்லது ஒரு தனி அதிகாரியையாவது நியமிக்க வேண்டும். நான்கு மாதங்களாக சம்பளமில்லாமல் தவிப்பவர்களுக்கு உடனடியாக சம்பளம் அளிக்க வேண்டும் என்றனர்.

பேட்டியின்போது குழுவின் துணைத் தலைவர் ஆர்.கே.அழகேசன், இணைச் செயலர் பிரபாகரன் வேதமாணிக்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

Thanks for reading அமெரிக்கன் கல்லூரி பேராயர் தரப்பு பொறுப்பு முதல்வரின் நியமனத்துக்கு கல்லூரிக் கல்வி இயக்குநரகம் ஆணை வழங்கவில்லை

« Previous
« Prev Post

0 comments :

Post a Comment