Home » » அமெரிக்கன் கல்லூரியில் மதுரை காமராஜர் பல்கலை. குழு விசாரணை

அமெரிக்கன் கல்லூரியில் மதுரை காமராஜர் பல்கலை. குழு விசாரணை

1.4.2011 தேதியிட்ட  தினமணியிலிருந்து
மதுரை, மார்ச் 31: செமஸ்டர் தேர்வு நடத்துவது தொடர்பாக, அமெரிக்கன் கல்லூரியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயர்மட்ட சிண்டிகேட் குழுவினர் புதன்கிழமை நேரில் விசாரணை நடத்தினர்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பொறுப்பு முதல்வராக யார் நீடிப்பது என்ற பிரச்னை இரு தரப்பினரிடையே உள்ளது. இப்பிரச்னையில் தீர்வு காணக் கோரி, ஒரு தரப்பு மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து வருகின்றனர்.

இந்நிலையில், செமஸ்டர் தேர்வு நடத்துவதில் உள்ள சிக்கலும், ஏற்கெனவே நடத்தப்பட்ட 5-வது செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் இருப்பது தொடர்வதாலும் பிரச்னை இருந்து வருகிறது.

இது குறித்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்விப் பேரவைக் கூட்டம், ஆட்சிப் பேரவைக் கூட்டத்தில் பேசிய உறுப்பினர்கள், இப்பிரச்னை குறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தரின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். இதையடுத்து, அமெரிக்கன் கல்லூரியில் தேர்வு நடத்துவதில் உள்ள பிரச்னைகள் தொடர்பாக உண்மை நிலையைக் கண்டறிவதற்காக, ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்று, பல்கலைக்கழகத் துணைவேந்தர் இரா. கற்பக குமாரவேல் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் செனட் அமர்த்தியுள்ள உயர்மட்டக் குழு, புதன்கிழமை அமெரிக்கன் கல்லூரியில் சரியாக வகுப்பு நடைபெறுகிறதா, இல்லையா என்பது குறித்தும், அகமதிப்பீட்டுத் தேர்வு மற்றும் அல்பருவத் தேர்வு நடத்துவதற்கான சாத்தியங்கள் பற்றியும் நேரில் விசாரணை நடத்தியது.

பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர் ஆர். மதனகோபால் தலைமையிலான பதிவாளர் (பொறுப்பு) முனைவர் அழகப்பன், ஆட்சிக் குழு உறுப்பினர் பி.டி. மனோகரன், பல்கலைக்கழகத் தேர்வாணையர் ராஜ்யக்கொடி மற்றும் கல்லூரி வளர்ச்சிக் குழு டீன் டேவிட் அமிர்தராஜன் ஆகியோர் அடங்கிய குழுவினர், இந்த விசாரணையை மேற்கொண்டனர்.

இது குறித்து, ஆட்சிக் குழு உறுப்பினர் ஆர். மதனகோபால் கூறியதாவது:அமெரிக்கன் கல்லூரியில் வகுப்புகள் நடைபெறும் சூழல், தேர்வு நடைபெறுவதற்கான சாத்தியம், 5-வது செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிடுவது உள்ளிட்டவற்றில் உண்மையை நிலையை அறியும் வகையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக, இரு தரப்பு ஆசிரியர்களிடத்திலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. மேலும், இது சம்பந்தமாக பல்கலைக்கழகத்தில் விவாதம் நடத்தப்படும். தேவைப்பட்டால், இரு தரப்பு ஆசிரியர்களையும் அழைத்துப் பேசி தேர்வை எப்போது நடத்திடுவது என்பது குறித்து பேசி முடிவு எடுக்கப்படும் என்றார்.

முனைவர் பி.ஆர். அன்புதுரை கூறுகையில், இளங்கலை மாணவர்களுக்கு 5-ம் பருவ மதிப்பெண் பட்டியலும், முதுகலை மாணவர்களுக்கு மூன்றாம் பருவ மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட வேண்டியது அத்தியாவசியமாக இருக்கிறது. தகுந்த காவல்துறை பாதுகாப்பு கொடுக்கப்பட்டால், பல்கலைக்கழகத்தின் அவார்ட்ஸ் கமிட்டியின் உதவியோடு தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு தயாராக இருப்பதாக விசாரணைக்கு வந்த பல்கலைக்கழகக் குழுவினரிடம் கூறியிருப்பதாகத் தெரிவித்தார்.
 
Thanks for reading அமெரிக்கன் கல்லூரியில் மதுரை காமராஜர் பல்கலை. குழு விசாரணை

« Previous
« Prev Post

0 comments :

Post a Comment